பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சேன்ங் வான்குவாங் இலங்கைக்கு வந்துள்ளாா். சீனப் பாதுகாப்பு அமைச்சர் தெற்காசிய நாடுகள் சிலவற்றுக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் சீனப் பாதுகாப்புச் செயலாளர், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றைய தினம் சந்தித்துள்ளார்.
இதன்போது நீண்டகாலமாக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு சீன அரசாங்கம் வழங்கிவரும் பயிற்சிகளுக்கும் நாட்டில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி தொடர்ந்தும் சீன உதவி வழங்கும் என நம்புவதாகவும்தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையே இருந்துவரும் நட்புறவு காரணமாக பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த அனைத்து உடன்படிக்கைகளையும் இலங்கையின் கீர்த்திக்கும் சுதந்திரத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படாதவகையில் மேற்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வான்குவாங் தற்போதைய இலங்கை ஜனாதிபதி அவர்களின் கீழ் இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் மக்கள் நலன்பேணல் பலமான நிலையில் உள்ளதாகவும் இது சீன அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.