177
ஊர்காவற்துறை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் கணவன் மற்றும் அயலவரின் இரத்தமாதிரிகள் , மரபணு பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ. எம்.எம். றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு திங்கட்கிழமை காலை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கபப்ட்டு உள்ள இரண்டு சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் அயலவர் மன்றில் முன்னிலை ஆகி இருந்தனர்.
மரபணு பரிசோதனைக்காக அவர்கள் இருவரின் இரத்தமாதிரிகள் எடுப்பதற்கு மன்றில் ஊர்காவற்துறை காவல்துறையினர் அனுமதி கோரினர். அதனை அடுத்து நீதிவான் இருவரிடமும் இரத்தமாதிரிகள் வழங்க சம்மதமா ? என கேட்ட போது அதற்கு இருவரும் சம்மதித்ததை அடுத்து நாளை (21) யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இரத்த மாதிரிகளை வழங்குமாறு நீதிவான் கட்டளையிட்டார். அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் , அதுவரையில் இரு சந்தேக நபர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.
அதேவேளை கடந்த வழக்கு தவணையின் இரண்டாவது சந்தேக நபரின் இரத்தமாதிரிகளை நாளைய தினம் (21) சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் வழங்குமாறு உத்தரவு இடப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழக்கின் பின்னணி
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் பெண் படுகொலை செய்யபட்டார். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சகோதர்களான இரு நபர்கள் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்துறை காவல்துறையின் காவலரணில் கடமையில் இருந்த காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
Spread the love