யாழ். நெடுந்தீவு பகுதியில் சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கு விசாரணையானது தொடர் வழக்கு விசாரனைக்காக எதிர்வரும் 03ஆம் திகதி முதல் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு பங்குனி மாதம் 03ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் ஜேசுதாசன் லக்ஸ்சினி எனும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து அதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டார். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபர் கைது செய்யப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரனையானது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்று நீதிவான் நீதிமன்ற விசாரனைகள் முடிவடைந்ததை தொடர்ந்து சட்டமா அதிபரால் வழக்கானது யாழ்.மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது.
அந்நிலையில் அந்த வழக்கானது நேற்றைய தினம்(திங்கட்கிழமை) யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இவ் வழக்கு விசாரனையை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தியிருந்தார். இதன்படி இவ் வழக்கில் அரச தரப்பு சாட்சிகளாக பன்னிரன்டு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய வழக்கு விசாரனையின் போது எதிரிகளுக்கு குறித்த வழக்கு தொடர்பான குற்றப் பகிர்வு பத்திரமானது தமிழ் மொழியில் வாசித்து காட்டப்பட்டிருந்ததுடன் குற்றப் பகிர்வு பத்திரமும் வழங்கப்பட்டிருந்தது.