யாழ். அச்சுவேலி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை படுகொலை செய்தும் மேலும் இருவரை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நபருக்கு எதிரான வழக்கு, சட்டமா அதிபரால் யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் நிற்குணாநந்தன் அருள்நாயகி, இவரது மகள் யசோதரன் மதுஷா மற்றும் மகன் சுபாங்கன் ஆகியோரை படுகொலை செய்த தனஞ்சஜன் தர்மிகா (சந்தேகநபரின் மனைவி) மற்றும் தங்கவேல் யசோதரன் ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த குற்றசாட்டின் கீழ் பொன்னம்பலம் தனஞ்சஜன் எனும் நபர் கைது செய்யபப்ட்டு உள்ளார்.
குறித்த வழக்கு விசாரனையானது யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று விசாரனைகள் நிறைவடைந்து, அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சட்டமா அதிபர் இவ் வழக்கு விசாரனையை யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
அந்நிலையில் குறித்த வழக்கானது யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது இவ் வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தியிருந்தார். அத்துடன் இவ் வழக்கில் அரச தரப்பு சாட்சியாக பதினான்குபேர் இணைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எதிரிக்கு நேற்றைய தினம் மன்றில் குற்றப் பகிர்வு பத்திரமானது தமிழில் வாசித்து காட்டப்பட்டதுடன் அது எதிரிக்கு வழங்கப்பட்டும் இருந்தது. அதனை தொடர்ந்து வழக்கின் சாட்சிகளை பதிவு செய்வதற்காக இவ் வழக்கு விசாரனையை இம் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.