வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 10 குடும்பங்கள் வாள் வெட்டு குழுவிடம் இருந்து பாதுகாப்பு தேடி ஆலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வாளினால் வெட்டி காயப்படுத்தப்பட்டார்.
அந்நிலையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) மாலை நேரம் வாள் வெட்டு குழு ஒன்று கைகளில் வாள்களுடன் அப்பகுதிகளில் மோட்டார்சைக்கிள்களில் சென்று உள்ளனர். அதனால் அச்சமடைந்த அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடும்பமாக சென்று பருத்தித்துறை காவல்நிலையம் சென்று வாள்வெட்டுக் குழுவை கைது செய்யுமாறு முறைப்பாடு பதிவு செய்தனர்.
முறைப்பாட்டின் பிகராம் காவல்துறையினர் வாள் வெட்டுக்குழுவை கைது செய்யாமையால், குறித்த வாள் வெட்டுக்குழு இரவு வேளைகளில் மீண்டும் அப்பகுதிக்கு வந்து வாள் வெட்டுக்களை மேற்கொள்ளலாம் எனும் அச்சம் காரணமாக பருத்தித்துறை நீதிமன்றின் முன்பாக உள்ள ஆலயத்தில் நேற்றிரவு தஞ்சம் அடைந்தனர்.
அதனை அடுத்து பின்னிரவு நேரபகுதியில் ஆலயத்திற்கு சென்ற பருத்தித்துறை காவல்துறையினர் , மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும் , மீண்டும் வாள் வெட்டு சம்பவம் நடைபெறாத வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் உத்தரவாதம் வழங்கியதை அடுத்து அப்பகுதி மக்கள் தமது வீடுகளுக்கு சென்றனர்.