கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர். எதிர்வரும் நாட்களில் இது குறித்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை உள்ளிட்ட பல்வேறு கொலைகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கபில ஹெந்தவிதாரன, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர ஆகியோரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.
அண்மையில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவினால் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வழங்கிய இரகசிய தகவல்களின் அடிப்படையில் கோதபாய உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கபில ஹெந்தவிதாரன தலைமையிலான குழு ஒன்று பல்வேறு குற்றச் செயல்களை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.
இந்தக் குழுவில் சுமார் பதினெட்டு பேர் அங்கம் வகித்துள்ளதாகவும் இவர்களின் விபரங்களும் திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.