என்னுடைய கணவர் இல்லையென்றாலும் பரவாயில்லை என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் தாங்கோ உங்களிடம் நான் வேறு எதனையும் கேட்கவில்லை என தாயொருவர் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
கிளிநொச்சியில் சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு உண்மையான மாற்றத்திற்கான கருவி பெண்கள் என்ற தொனிப்பொருளில் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் சங்கமானது இன்று 22-03-2017 கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் விசேட நிகழ்வொன்றை நடாத்தியிருந்தது.
இந்த நிகழ்வின் இறுதியில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் சங்க அங்கத்தவர்களுடனான கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன் போது எழுந்து மேடைக்கு அருகில் வருகைதந்த தாயொருவர் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை விடுதலை செய்யுமாறும் அனைவருக்கும் முன் கதறி அழுதார்.
கடவுளே அம்மா என்னுடைய கணவர் இல்லையென்றாலும் பரவாயில்லை என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் தாங்கோ நான் என்னுடைய பிள்ளைகள் இன்றி மிகமிக அவலத்தில் வாழ்கின்றேன். உழைக்கின்ற பிள்ளைகள் இன்றி குடிசை வீட்டில் மழைக்கும் வெயிலுக்கும் முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றேன். என்ர பிள்ளைகளை விடுதலை செய்யுங்கோ என கதறி அழுத சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.