யுத்தக் குற்றச் செயல் விசாரணை கறித்த பிரதமர் ரணில் விக்ரமசி;ங்கவின் கருத்து பிழையானது என கூட்டு எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தக் குற்றச் செயல் விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு இருக்காது எனவும், விசாரணைகளின் போது கண்காணிப்பாளர்களாக மட்டும் வெளிநாட்டு நீதவான்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் பிரதமர் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தார். எனினும், பிரதமரின் இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கூட்டு எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் பிரதமர் தெளிவான பதிலை அளிக்கவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த தீர்மானத்தின் ஆறாம் சரத்தில் வெளிநாட்டு நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த சரத்தில் திருத்தங்களைச் செய்யாவிட்டால் சர்வதேச நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமையை தவிர்க்க முடியாது என கூட்டு எதிர்க்கட்சித் தெரிவித்துள்ளது.