பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற தாக்குதலில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாநகர காவல்துறை துணை ஆணையாளர் மார்க் ரௌலி அறிவித்துள்ளார் என பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் தாக்குதலை மேற்கொண்டவரும் அவரால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியும் உள்ளடங்குவதாகவும் இதனையடுத்து மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது எனவும் குறைந்தது இருபது பேர்; காயமடைந்துள்ளனர் எனவும் அதில் சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு 2 -பிரித்தானிய பாராளுமன்ற வளாத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிலர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் இதனை ஒரு பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாகவும் பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குலாளி ஒருவர் பிரித்தானிய பாராளுமன்ற வளாத்தில் வைத்து காவற்துறை அதிகாரியை கத்தியால் குத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து காவற்துறையினர் அவர்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் காயமடைந்த தாக்குதலாளி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கார் ஒன்று பலவந்தமாக அங்கே நின்றவர்கள் மீது மோதியதாகவும் அதில் நான்கு பாதசாரிகள் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை வாகனங்களும், காவல்துறை வாகனங்களும் அங்கு சென்றுள்ளதாகவும் பாராளுமன்றத்துக்குள்ளிருந்த பிரித்தானிய பிரதமர் தெரெசா மே அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற அவையின் நடவடிக்கையும் அவசரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது