189
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யபட்டு உள்ள சந்தேகநபர்களில் ஒன்பதாவது நபர் நீதிவானுக்கு கடிதம் எழுதியதாகவும் , அதற்கு நீதிவான் பதில் கடிதம் அனுப்பவில்லை என திறந்த நீதிமன்றில் தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
அதன் போது , கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள 12 சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் மன்றில் ஏதேனும் தெரிவிக்க விரும்புகின்றீர்களா ? என நீதிவான் வினாவினார்.
அதற்கு நான்காவது சந்தேக நபர் தாம் சுகவீனமுற்று நேற்றைய தினம் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டேன் அங்கே முழுமையான சிகிச்சை பெற முன்னர் தம்மை இன்றைய தினம் இங்கே அழைத்து வர வேண்டும் என கூறி வைத்திய சாலையில் அனுமதிக்காது அழைத்து வந்து விட்டதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கின் ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தெரிவிக்கையில் , நான் நீதிவானுக்கு சிறையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி இருந்தேன். அந்த கடிதம் தொடர்பில் பதில் கடிதம் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என மன்றில் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிவான் , சந்தேக நபர் ஒருவர் நீதிவானுக்கு இவ்வாறு கடிதங்கள் அனுப்ப முடியாது. ஏதேனும் தெரிவிக்க விரும்பின் மன்றில் தெரிவிக்க முடியும். என தெரிவித்தார்.
Spread the love