இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களை தீர விசாரித்து தண்டனை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலமையானது பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை தயங்குவதாக அல்லது அச்சமடைவதாகவே தென்படுகின்றதென ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில், நேற்றைய தினம் (புதன்கிழமை) இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்காமல் ஒருபோதும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான நீதி விசாரணை பொறிமுறையை இலங்கை ஏற்படுத்தினாலும், அது நம்பகத்தன்மை வாய்ந்ததாக அமையவேண்டுமாயின் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமெனவும் ஐ.நா ஆணையாளர் இதன்போது வலியுறுத்தினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்கியவாறான கலப்பு விசேட நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை தொடர்ந்தும் நிராகரித்து வந்தது.
தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவில் ஆட்சிபீடமேறிய மைத்திரி அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக்கூறல் செயற்பாட்டை முன்னெடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச தலையீட்டுடனான விசாரணையே பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதியை பெற்றுக்கொடுக்குமென ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மற்றும் சுயாதீன கண்காணிப்புக் குழுக்களின் தகவல்களின் பிரகாரம் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மொத்தமாக யுத்த காலத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.