இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை பாதுகாத்து மீட்டெடுத்த ராஜபக்ஸக்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று (புதன்கிழமை) இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பேரவை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, ரோஹித்த அபேகுணவர்தன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையின் பெரும்பான்மை இன மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
இலங்கை ராணுவத்திற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கும், ஆதரவான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாக மற்றுமொரு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.