தமிழ் எழுத்துலகின் பிதாமகர்களில் முக்கியமானவரான அசோகமித்திரன் இன்று சென்னையில் காலமானார். 86 வயதான அசோகமித்திரன் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். தியாகராஜன் என்பது இவரது இயற்பெயர். 1931ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகந்தராபாத் நகரில் பிறந்தவர். பின்னர் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து குடியமர்ந்தார்.
தமிழ் எழுத்துக்கும், இலக்கியத்துக்கும் அசோகமித்திரன் ஆற்றியது மிகப் பெரிய பங்காகும். 1996ம் ஆண்டு தனது அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். பதினெட்டாவது அட்சக்கோடு, ஆகாசத் தாமரை, மானசரோவர், கரைந்த நிழல்கள் உள்ளிட்ட ஏராளமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் இலக்கிய சிந்தனை விருது, எம்.ஜி.ஆர். விருது, என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருது, க.நா.சு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் அசோகமித்திரன்.