அர்த்தமுள்ள வகையில் இலங்கையில் அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. அரசியல் சாசனத் திருத்தங்கள், கால மாறு நீதிப்பொறிமுறைமை, இராணுவம் பயன்படுத்தி வரும் தனியார் காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலீடாக சட்டம் கொண்டு வருதல் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ள இலங்கைக்கு ஊக்கமளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை;கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு இரண்டாண்டு கால அவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், மனித உரிமை மேம்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தின் அடிப்படைகள் எனவும் அவற்றை உரிய முறையில் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்டு வரும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை என தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் அறிக்கைக்கு ஏற்ப இன்னும் பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை எடுக்க வேண்டியிருப்பதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.