பக்கத்து வீட்டுப் பெடியன் அவன் வீட்டில் செய்கிற வேலை எங்கட வீட்டை உடைக்கிற மாதிரி இருந்தது. அப்படி என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக பக்கத்து வீட்டை போனன் அவனோ மேசை மீது ஒரு கதிரை வைத்து ஏறி நின்று சுவரில் ஆணி அறைந்து கொண்டிருந்தான். ‘என்ன தம்பி சுவரில் ஆணி ஏறுதில்லையோ சுத்தியலால உந்த அடி அடிக்கிறீர்’ என்றேன் அவனோ. ‘ஆணியும் பலமாய் இருக்கு சுவரும் பலமாய் இருக்குது ஒன்றும் விட்டுக் கொடுக்கிற மாதிரியில்லை அதுதான் மாங்கு மாங்கென்று மாங்கிறன். ஏதோ ஒரு முடிவு வரத்ததானே வேண்டும்’ என்றான். நானோ ‘ஆணி அடித்து என்ன செய்யப் போறீர்’ என்று கேட்டேன். அவனோ ‘ படம் கொளுவத்தான். வீட்டில நிறையப் போட்டோக்கள் சும்மா கிடந்து பழுதாகுது அதுதான் போட்டோக்களை எடுத்து பிறேம் போட்டு சுவரில் தொங்கவிட்டால் போட்டோக்கள் பாதுகாப்பாகவும் இருக்கும் வீட்டிற்கு வாறவையல் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும் என்றான்.
உண்மை தான் என்று எனக்குள்ளே நினைத்துக் கொண்டிருக்க…. அவனோ ‘அண்ணை என்ன கனக்க யோசிக்கிறியள் போல’. என்றான். நானோ ‘இல்லையடா தம்பி போட்டோவுக்கு பிறேம் போடுகின்றாங்கள். அதேபோல எங்கட அரச அலுவலகங்களுக்கு ஒரு பிறேம் போட்டால் ஒழுங்காக இயங்கும் தானே’ என்றேன். சும்மா போங்க அண்ணை அலுவலகத்துக்கு பிறேமை போட முடியுமா? வீட்டுக்குள் சுவரில் தொங்கும் போட்டோவுக்கு மட்டும் பிறேமை போட முடியுமே ஒழிய வேறெங்கும் பிறேமை போட முடியாது’ என்றான். அது சரிதான் என்று சொல்லி விட்டு பொடியன் வீட்டில் இருந்து வெளியே வந்தன்.
எதுக்கு எது அதுக்கு அது என்று பொருத்தமானவர்களுக்கு வேலையை வழங்கினால் எந்தப் பிரச்சினையும் வராது. ஒரு போட்டோவுக்கு போடுவது போல இவரைப் போட்டிருக்கக் கூடாது. வருமான வரி அதிகாரி என்ற போஸ்ட்டை அரசு வழங்காமலே இவருக்கு இந்த அலுவலகத்தின் முன்னைய சாந்தமான செயலாளர் வழங்கியிருக்கிறார். இந்த பிரதேச அலுவலகத்துக்கு வருமானம் வருகுதோ இல்லையோ இவருக்கு கள்ளத்தனமான முறையில் இலட்சக் கணக்கில் வருமானம் வந்து கொண்டிருந்துதாம். இந்த வருமானத்தை எடுத்து அலுவலகத்தின் பொறுத்த பதவிகளில் இருப்பவர்கள் பங்கிட்டுக் கொண்டார்களாம். இப்படி இருந்தும் தின்னையில் உள்ள ஒரு புடைவைக் கடையில் சர்வாரை காசு கொடுக்காமல் வாங்கியிருக்கிறார் ஏனைய கடைகளில் சொல்லவா வேண்டும்.
அரச அலுவலர் ஒருவர் வெளிநாடு போறதென்றாலே அதற்கான தகுந்த காரணத்தைக் கூறி அனுமதி எடுத்து தான் போக வேண்டும். சம்பளம் இல்லாமல் 3 வருடங்கள் விடுமுறை எடுக்க முடியும். விடுமுறை எடுத்து வெளிநாடு போறதென்றால் வெளிநாடு செல்வதற்கான அனுமதியையும் பெற வேண்டும். இந்த அதிகாரி அலுவலகத்தில் விடுமுறையை எடுத்துக் கொண்டு வெளிநாடு செல்வதற்கான அனுமதியைப் பெறாது 7 வருடங்களுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் 20 இற்கு மேற்பட்ட தடவை வெளிநாடு சென்று வந்திருக்கிறார் என்றால் சும்மாவா. இவரின் உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அடிக்கடி பஸ்சிலை போய்வாற மாதிரி பிளைட்டில போய் வந்திருக்கிறாராம். இந்த விடயம் தான் பிடிபட்டுப் போக இவரின் மீது விசாரணைப் பிரிவு பாய்ந்துள்ளது.
இவரைத் தான் அண்மையில் தற்காலிகமாக வேலையை நிறுத்தி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ‘நான் பதவியில் இருக்கும் போது அப்பம் தின்றதாக என்மேல் விசாரணை நடத்துகின்றீர்கள் என்னுடன் சேர்ந்து அப்பம் தின்றவர்களுக்கு விசாரணை இல்லையா? என்று கேட்டுள்ளார். அதேபோல் இவரை வீட்டுக்கு அனுப்பியது போல் இந்த அலுவலகத்தில் பொறுத்த பதவியில் இருப்பவர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்பொழுது தான் இந்த அலுவலகம் சீராக இயங்கும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவரால் வடக்கிலை வருமானம் வரக்கூடிய சந்தைகளில் முன்னணியில் நிற்கும் தின்னையில் உள்ள சந்தை இயங்க முடியாமல் தள்ளாடுதாம். தின்னையில் உள்ள சந்தையில் வியாபாரிகள் இடம் எடுப்பதென்றால் இவரைத் தான் நாட வேண்டும். இவரால் 200 வியாபாரிகள் சந்தையில் இடம் எடுத்திருக்கிறார்கள். இதுவரை இந்த சந்தையில் எத்தனை வியாபாரிகள் இருக்கிறார்கள் என்ற தகவல் கூட அலுவலகத்தில் இல்லை. சந்தைக்கு இவருக்குத் தெரிந்த ஒருவரை இரவு காவலாளியாக வேலைக்கு அமர்த்தி அவர் மூலம் சந்தையில் இருந்த வியாபாரிகளின் மரக்கறிகளை திருடி வெளியில் விற்று பிடிபட்டும் தண்டனையில்லாது தப்பித்துள்ளார். சந்தையில் பாதைக்கு இடைஞ்சலாக பொருள்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வியாபாரிகளின் பொருள்களை அள்ளி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விடுவார்கள். பின்னர் வியாபாரிகளிடம் தண்டம் அறவிட்டதும் பொருள்களை மீள கையளிக்கும் போது தமக்கு எடுத்துவிட்டுத் தான் கையளிப்பார்கள்.
இந்த சந்தைக்கு மின்சார வசதிகூட ஒழுங்காக செய்து கொடுக்கப்படவில்லை. மின்சார ஊழியராக நியமிக்கப்பட்டவர் தரகு வேலையை ஒழுங்காக செய்து வருகிறார். பாதையில்லாத ஒரு காணியை இந்த அலுவலகத்துக்கு வாங்கி விட்டிருக்கினம். இந்த காணியை வாங்குவதற்கு மின்சார ஊழியர் தான் தரகர் வேலையை செய்திருக்கிறார். ஊரின் மத்தியில் ஒரு மொபிற்றல் கோபுரத்தை மக்களின் அனுமதியில்லாமல் நிறுவ வெளிக்கிட்டு அந்த இடத்தில் மக்கள் ஒன்றாகக் கூடி எதிர்ப்பு தெரிவிக்க மொபிற்றல்காரர் கைவிட்டு ஓடியதற்கும் இவர் தான் காரணம். முருகா உனது ஊரில் நடந்த இவர்களின் விளையாட்டை பார்த்துக் கொண்டு தானே இருந்தாய்.
இந்த அலுவலகத்துக்கு அண்மையில் புதிய செயலாளர் வந்ததன் பின்னர் தான் இப்படியான பிரச்சினைகள் குறைந்திருப்பதாக அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அலுவலகத்தில் பொறுப்பான பதவிகளில் இருந்து வேலை செய்த அனைவரின் மீதும் ஒழுங்கான விசாரணையை மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்குமாறு சந்தை வியாபரிகள் தொடக்கம் மக்கள் கேட்டு நிற்கின்றனர்.