இலங்கையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை, கனடிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்கள் இணைந்து அறிக்கை ஒன்றின் மூலம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளன.
இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்காகஇரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் இதன்மூலம் இலங்கை அரசாங்கம்; தானாகவே ஒரு சர்வதேச பொறிக்குள் அகப்பட்டிருக்கிறது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் பொறுப்புக் கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கான பொறுப்பும் கடப்பாடும் மீளவும் ஒருமுறை சர்வதேசத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் குறித்த பிரேரணையின் கீழ் ஏற்றுக்கொண்டிருக்கும் விடயங்களை அமுல்படுத்துவதற்கு முழு அளவிலான வேலைத்திட்டம் மற்றும் அதற்குரிய கால அட்டவணை ஆகியவற்றை ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியிருக்கின்றார் எனவும் உறுப்பு நாடுகள் பலவும் அவரது கூற்றினை ஆதரித்துள்ள நிலையில் இலங்கையின் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்; கொள்ளக் கூடியவாறான பரந்த வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.