டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் இன்று இந்திய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசியுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி விவசாயிகள் டெல்லியில் கடந்த 14ம்திகதி முதல் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியபடியும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்று அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து கோரிக்கை மனுவை கையளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அருண் ஜெட்லி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் விவசாயிகள் நேரில் சந்தித்து பேசினர். தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அப்போது விவசாயிகள் அளித்தனர். விவசாய கடன்கள் தள்ளுபடி பற்றி மோடி அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.