டெல்லியில் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று மாலை இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அப்போது கடன் தள்ளுபடி மற்றும் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்துள்ளனர். குறித்த சந்திப்பில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக விவசாய குழு பிரதிநிதிகள் இன்று, திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் இணைந்து அருண் ஜேட்லியை சந்தித்தனர்.
இதேவேளை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று பிரதமர் மோடியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதுவரை தமிழகத்திற்கு திரும்ப மாட்டோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 15வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.