சென்னையின் மெரினா கடற்கடையில் இரண்டாவது நாளாக இன்றும் காவல்துறை கண்காணிப்பு தொடர்கிறது எனவும் அதிவிரைவு மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுப்புரட்சியை போன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் நேற்றுக் காலை முதல் தகவல் பரவியதனைத் தொடர்ந்து அங்கு இளைஞர்கள் கூடுவதனை தடுக்கும் வகையில் இவ்வாறு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன் சந்தேகத்திற்கிடமாக செல்பவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.