உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து நேற்று வியாழக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் நான்காம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் இருவர் மயக்கமடைந்தனர். அதனை அடுத்து மயக்கமடைந்த இரு மாணவர்களும் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த வாரம் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் கலைப்பீடத்தை சேர்ந்த 13 மாணவர்களுக்கு பல்கலைகழக நிர்வாகத்தால் வகுப்பு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கலைப்பீட மாணவர் ஒன்றியமும் கலைக்கப்பட்டு விட்டதாக பல்கலைகழக நிர்வாகம் அறிவித்து இருந்தது.
பல்கலைகழக நிர்வாகத்தின் அத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதேவேளை இன்றைய தினம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இராமநாதன் நுண்கலை பீட மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.