மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வகுப்புத் தடையை எதிர்க்கொண்டிருந்த மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தமையை தொடர்ந்து மாணவர்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 5 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கடந்த வியாழக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த வாரம் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் கலைப்பீடத்தை சேர்ந்த 13 மாணவர்களுக்கு பல்கலைகழக நிர்வாகத்தால் வகுப்பு தடை விதிக்கப்பட்டதுடன் கலைப்பீட மாணவர் ஒன்றியமும் கலைக்கப்பட்டு விட்டதாக பல்கலைகழக நிர்வாகம் அறிவித்து இருந்தது.
பல்கலைகழக நிர்வாகத்தின் அத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.