வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முறையான மதிப்பீடுகளோ அல்லது திட்டமிடலோ இன்றி முறையற்ற விதத்தில் கடந்த காலத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தமையினால் தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையான திட்டத்துடன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மெக்ஹெய்சர் விளையாட்டரங்கில் நடைபெறும் ‘தேசிய யொவுன் புரய 2017’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இளைஞர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்களது பலத்தையும், ஆக்கத்திறனையும் நாட்டின் எதிர்காலத்திற்காக பயனுள்ள விதத்தில் உபயோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மீண்டும் நாட்டில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான தேவையை ஏற்படுத்தாதிருப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
எமது இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்புக்களைப் பெறுவதற்காக அரசியல்வாதிகளின் பின்னால் சென்ற யுகம் முடிவுறுத்தப்பட்டு அவர்களது அறிவு, ஆற்றல்கள் மற்றும் ஆக்கத்திறனின் ஊடாக அவர்களுக்கான சமூகத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.