165
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒருவரை,வெளிநாட்டுக்கு செல்ல விடுமுறை அனுமதியினை எவ்வாறு பிரதம செயலாளர் வழங்கினார் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடமாகாண முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளரான ஜெகூ வெளிநாட்டில் கல்வி கற்று வந்த நிலையில் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டு உள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது ஜெகூ சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , நாம் உரிய முறையில் அனுமதி பெற்றே அவுஸ்ரேலியா சென்று கல்வி கற்றோம். திடீரென திரும்ப நாட்டுக்கு வருமாறு அழைக்கப்பட்டு உள்ளோம். எமக்கான அனுமதியினை பிரதம செயலாளர் பத்திநாதன் எழுத்து மூலம் வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நீதிபதி தெரிவிக்கையில் , ஒருவர் அவுஸ்ரேலியா நாட்டு பல்கலைகழகத்திற்கு புலமைபரிசில் கிடைத்து கல்வி கற்க உரிய முறையில் அனுமதிகளை பெற்று சென்றுள்ளார். அவரை உடனே திரும்பி வா என அழைத்ததன் மூலம் எதிர்காலத்தில் அந்த பல்கலைகழகம் இவ்வாறன புலமை பரிசிலை வழங்க தயக்கம் காட்டும் என்பதுடன் வடமாகாண பிரதிநிதி ஒருவரின் வாய்ப்பு பறிபோயுள்ளது எனவும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றால் எதற்காக வெளிநாடு செல்ல அனுமதித்தீர்கள் ? எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதனை தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறும் என தெரிவித்து வழக்கினை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
வடக்கில் நடைபெற்ற மாபெரும் ஊழல் குற்றமான நெல்சிப் திட்ட ஊழலில் வடமாகாண முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளரான ஜெகூக்கு தொடர்பு இருப்பதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love