195
தலைப்பகுதியில் மொட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதனால் மண்டையோடு உடைந்து மூளை கலங்கள் பாதிப்படைந்து சிறுமியின் மரணம் சம்பவித்து உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் சாட்சியம் அளித்தார். கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி சந்தைக்கு சென்ற குறித்த சிறுமி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கல்லொன்றால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.அதன் போது 5ஆவது சாட்சியாக சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் சாட்சியம் அளிக்கையில்,
வயிற்றுக்கு கீழ் ஆடைகள் இன்றி முக குப்புற சடலம் கிடந்தது.
கடந்த 2012ஆம் ஆண்டு 3ஆம் மாதம் 4ஆம் திகதி (சம்பவ தினத்திற்கு மறுநாள்) ஊர்காவற்துறை நீதிவானின் உத்தரவின் பேரில் நெடுந்தீவு பிரதேசத்திற்கு சென்று, சடலம் கிடந்த இடத்திற்கு காவல்துறை தடயவியல் பிரிவு மற்றும் காவல்துறையினருடன் குழுவாக நேரில் சென்று சம்பவ இடத்தை அவதானித்தேன்.
அதன் போது சிறுமியின் உடல் முக குப்புறமாக நிலத்தை பார்த்தவாறு கிடந்தது. உடலில் வயிற்றுக்கு கீழ் பகுதியில் ஆடைகள் அற்று காணப்பட்டன. தலையில் இருந்து இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டது. பிறப்பு உறுப்பில் இருந்தும் இரத்தம் கசிந்து விந்தணுவை ஒத்த திரவமும் காணப்பட்டது.
சடலத்தின் அருகில் இருந்து தடயங்களை சேகரித்தோம்.
சடலத்தின் அருகில் பணம் , நீல நிற பொலீத்தீன் பை , செருப்பு , ஆடை , உள்ளாடை , இரத்தம் தேய்ந்த முருங்க கல் என்பன காணப்பட்டன. அவற்றினை தடயவியல் பிரிவினர் தடய பொருட்களாக சேகரித்துக் கொண்டனர். அதன் பின்னர் சடலத்தை பாதுகாப்பாக நெடுந்தீவு பிரதேச வைத்திய சாலைக்கு எடுத்து சென்று உடல் கூற்று பரிசோதனையை மேற்கொண்டேன்.
உடலில் கடி காயம் காணப்பட்டது.
அவ்வேளை சிறுமியின் மேல் ஆடையில் இருந்து நான்கு தலை முடியினை கண்டெடுத்து தடய பொருளாக சேகரித்துக்கொண்டோம். அவ்வேளை சிறுமியின் இடது கையின் மேற்பகுதியில் பின் புறமாக கடிகாயம் காணபட்டது. அதில் தெளிவாக பல் அடையாளம் காணப்பட்டதனால் அந்த பகுதியை ஆய்வு செய்வதற்காக பல் வைத்திய நிபுணருக்கு அந்த பகுதியை வெட்டி அனுப்பி வைத்தோம்.
உடலில் 21 காயங்கள் காணப்பட்டன.
அதன் பின்னர் உடல் கூற்று பரிசோதனையை முன்னெடுக்கும் போது சிறுமியின் உடலில் 21 காயங்கள் காணப்பட்டன அவற்றில் கீழ் உதடு, மேல் உதடு மற்றும் இடது கையில் ஏற்பட்ட கடிகாயம் ஆகிய மூன்று காயங்கள் காணப்பட்டன. அவை, பாலியல் வன்புணர்வின் போது ஏற்பட கூடிய காயங்கள். பிறப்பு உறுப்பு மற்றும் ஆசன வாயில் ஏற்பட்ட இரண்டு காயங்கள் காணப்பட்டன. அவை , பாலியல் வன்புணர்வினால் ஏற்பட்ட காயங்கள் ஆகும்.
தட்டையான ஆயுதத்தால் அடித்துக்கொலை.
ஏனைய காயங்களில் 5 காயங்கள் தலையின் இடது புறம் ஏற்பட்ட கூட்டு காயம் அதில் 4 காயங்கள் வெடிப்பு காயங்கள் ஒரு காயம் கண்டல் காயம் ஆகும். அது தட்டையான ஆயுதத்தால் பலமாக தாக்கியதனால் ஏற்பட கூடிய காயம். அவ்வாறு தாக்கப்பட்டதனால் மண்டையோடு உடைந்து மூளையின் மென் சவ்வு கிழிந்து,இரத்த பெருக்கு அதிகமாகி மரணம் சம்பவித்து உள்ளது. ஏனைய 11 காயங்களும் உராய்வு காயங்கள் மற்றும் கண்டல் காயங்கள் ஆகும். என சாட்சியம் அளித்தார். அதனுடன் அவரது சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்ட து.
எதிரியை சிறுமிக்கு பின்னால் பத்தடி தூரத்தில் கண்டேன்.
அதனை தொடர்ந்து வழக்கின் மூன்றாவது சாட்சியமான பாத்திமா சீலி சாட்சியம் அளிக்கையில் , நான் நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்தனான். சம்பவ தினமான கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நானும் முன் வீட்டில் வசிக்கும் தோமஸ் எலிசபெத் என்பவரும் வீட்டின் முன் நின்று கதைத்துக்கொண்டு இருந்தோம்.
அப்போது காலை 8.30 மணியளவில் லக்சாயினி பெண்கள் செலுத்தும் துவிச்சக்கர வண்டியில் செல்வதை கண்டேன். அப்போது , எலிசபெத் “எங்கே போகிறாய் ” என லக்சாயினியை கேட்டார். அதற்கு அவர் தான் மீன் வாங்க செல்வதாக சொல்லி சென்றார்.
அவ்வேளை அவருக்கு பின்னால் சுமார் பத்தடி தூரத்தில் எதிரான ஜெகதீஸ்வரன் ஆண்கள் செலுத்தும் துவிச்சக்கர வண்டியில் சென்றார். அதுவே நான் கடைசியாக லக்சாயினையை கண்டது. அதன் பின்னர் மதியம் 2 மணியளவில் பிள்ளையார் கோவிலடியில் ஒரு பெண் குழந்தை கல்லால் அடித்துக் கொல்லப்பட்டு சடலமாக கிடக்கின்றார் என்ற தகவல் அறிந்தேன். மாலை 5 மணியளவிலையே கொல்லப்பட்டது லக்சாயினி என தெரியும்.
மரண சடங்குக்கு செல்லவில்லை.
நான் அவரது மரண சடங்குக்கும் செல்லவில்லை. ஏனெனில் கடைசியாக அந்த பிள்ளையை நான் கண்டேன். அவ்வாறு கண்ட பிள்ளையை சடலமாக பார்க்க விரும்பாததால் இறுதி சடங்குக்கு கூட செல்லவில்லை என சாட்சியம் அளித்தார். அதனை தொடர்ந்து , அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.
மீன் வாங்க செல்கிறேன்.
அதனை தொடர்ந்து வழக்கின் 4ஆவது சாட்சியமான தோமஸ் எலிசபெத் சாட்சியம் அளிக்கையில் ,
நான் நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்தனான். சம்பவ தினமானம் நானும் முன் வீட்டில் வசிக்கும் பாத்திமா சீலி (மூன்றாவது சாட்சி ) என்பவரும் வீட்டின் முன் நின்று கதைத்துக்கொண்டு இருந்தோம். அப்போது காலை 8.30 மணியளவில் லக்சாயினி அந்த வழியால் சென்றார். நான் எங்கே போகிறாய் என கேட்டேன். மீன் வாங்க செல்வதாக கூறி சென்றார். அவ்வேளை அவருக்கு பின்னால் எதிரியான ஜெகதீஸ்வரன் நீல நிற சரத்துடனும் ரி. சேர்ட் உடனும் பத்து பன்னிரண்டு அடி தூரத்தில் சென்றார்.
அதன் பின்னர் லக்சாயினை காணவில்லை. மாலை 5.30 மணியளவில் லக்சாயினை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார் என்பதனை அறிந்தேன். என சாட்சியம் அளித்தார். அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.
வழக்கின் பின்னணி
கடந்த 2012ம் ஆண்டு பங்குனி மாதம் 3ம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபர் நெடுந்தீவு காவல்துறையினரால் சந்தேகத்தில் கைது செய்யபப்ட்டு அவருக்கு எதிராக வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
Spread the love