இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் பங்குகொள்ள விரும்புகிறது என ஐ.நா அமைப்புக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி தெரிவித்திருந்த கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளில் தீவிரவாதமும், வன்முறையும் இல்லாத சூழலில் தீர்வு காண்பதில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு மாறவில்லை எனத் தெரிவித்துள்ள இந்திய மத்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் கோபால் பாக்லே இந்த பிராந்தியத்தின் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் பாகிஸ்தான் தொடர்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்கிறது எனவும் எனவே பாகிஸ்தானில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற தீவிரவாதத்துக்கு எதிராக சர்வதேச சமூகமும், அமைப்புகளும் அந்த நாட்டின் மீது சர்வதேச வழிமுறைகள் மற்றும் ஆணைகளை செயல்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.