யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்கூட்டி ஜனாதிபதி தேர்தலை நடத்தினார் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு மார்ச் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலில் 46 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது எனவும் இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது அரசாங்கமும் அறிந்திருந்தது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் சமால் ராஜபக்ஸவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குமாறு விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைத்தது எனவும் பிரதான கட்சிகள் இரண்டினாலும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.