இன்று இலங்கை நாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் அவசியம் உணரப்படுகின்ற போதும் இவ்வரசாங்கம் எதனையும் உருப்படியாக செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் . பாணந்துறையில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தங்களது எதிரிகள் தங்களை வீழ்த்த பிரதான ஆயுதமாக இனவாதத்தை கையில் எடுத்திருந்தனர் எனவும் அந்த வகையில்தான் அவர்கள் வெற்றியும் பெற்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று சிறுபான்மையின மக்கள் இவ்வாட்சியை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சிக் காலத்தில் வடக்கிலும்,கிழக்கிலும் பலவாறான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டோம் எனத் தெரிவித்த அவர் வடக்கு அபிவிருத்திக்கு தமக்கு ஒத்துழைப்பு வழங்காத சில கட்சிகள் தற்போதைய ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
தமது ஆட்சி காலத்தில் சம்பிக்க ரணவக்கவின் அடியாட்களாக இருந்த ஓரிரு தேரர்கள் மட்டுமே முஸ்லிங்களுக்கு எதிராகசெயற்பட்டார்கள் எனவும் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறு குரல்கொடுத்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.