ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சாலீல் ஷெட்டி இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கைக்கு இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்தை அரசாங்கம் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு நியாயம் வழங்குவதில் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்படக்கூடாது எனவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், இராணுவ மயமாக்கல், வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.