சீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள 9 மாடி கட்டிடத்திற்கு இன்று (07) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடிக்கல் நாட்டினார். சீன அரசாங்கத்தின் அரசியல் ஆலோசனை சபையின் தேசிய குழுத் தலைவர் யு.சென்ஷேன் அவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
இலங்கையின் பிரதான மருத்துவமனையும், ஆசியாவின் விசாலமான மருத்துவமனையுமான கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் நிலவிவரும் அதிக நெருக்கடிக்கு தீர்வாக ஜனாதிபதி , சுகாதார அமைச்சராக சேவையாற்றிய காலத்தில் சீன அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கவே இக்கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளதென ஜனாதிபதி செயலத்தின் ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் தற்போது செயற்படுத்தப்படும் வெளிநோயாளர் பிரிவிற்கு பதிலாக இந்த முழுமையான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகளை மூன்றரை வருட காலத்திற்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.