வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வலியுறுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல்லடம் தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று சென்ற ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயாஸ்தானிகராலய பணிப்பாளர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தெரிவித்த முதலமைச்சர், யாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் மக்களின் காணிகளை அபகரித்துள்ளதால் மக்களுக்கு காணிகளை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் யாழ்ப்பாணத்தில் இராணுவம் மக்களின் காணிகளை விட்டுச் சென்றால் மாத்திரமே, மக்கள் தமது காணிகளுக்குச் திரும்பிச் செல்லும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவிலிருந்தும் மக்கள் நாடு திரும்பிக் கொண்டிப்பதனால் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்வர வேண்டுமெனவும் ஐ.நா.அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவற்றினைப் பரிசீலிப்பதாக அவர்கள் தன்னிடம் உறுதியளித்துள்ளனர் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.