குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக –அராலியூர் குமாரசாமி:-
பார்த்தவுடன் சிரிப்பு வரும் இந்தக் காலத்து வடிவேல் போல அந்தக் காலம் நாகேஷ் பிரபலம். நாகேஷ் நடித்த படம் என்றால் எனது அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். படம் முடியும் மட்டும் கதிரையை விட்டு எழும்பமாட்டார். அப்பா பார்ப்பதால் என்னவோ எனக்கும் நாகேஷ் நடித்த படங்கள் பார்ப்பதில் ஒரு தனி விருப்பம். நகைச்சுவையில் பெயர் கொண்ட நாகேஷ் என்பதால் அவரின் பெயரை பல பேர் தமது பிள்ளைகளுக்கும் சூட்டியும் உள்ளனர். ஆனால் பெயரைச் சூட்டியதால் எல்லோரும் உலகப் பெயர் சொல்லும் படி திகழ்வார்கள் என்று எப்படி சொல்ல முடியும். உலக நாடுகளே வந்து இறங்கிச் சென்ற இந்த பிரதேச மக்களுக்கு இன்று கரைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு அரச செயலர் மக்களின் முகத்தில் இருந்து சிரிப்பு வருகுதோ இல்லையோ கண்ணீர் மட்டும் வரும் அளவிற்கு செயற்படுகின்றார்.
காணி வேணுமா… காணி வேணுமா… என்று கூவிக் கூவி இந்த செயலர் காணி விற்றுக் கொடுப்பதில் மும்முரமாக நிற்கிறாராம். தனது அலுவலக வேலையை விட இந்த வேலையில் மும்முரமாக ஈடுபடுகிறாராம். இவர் விற்ற காணிக்கு பிரச்சினை வர அந்தப் பிரச்சினை நீதிமன்றம் செல்ல வழக்குக்கும் இவர் தான் சாட்சியாக செல்கிறாராம். அலுவலகத்தில் நிற்பது குறைவு. இவர் பதவி வகிக்கும் வேலையை யார் பார்ப்பது என்ற கேள்வி எழுகிறது. காணி விவகாரத்தில் பிசியாக நிற்க இவர் எப்படி அலுவலகம் வரும் மக்களின் வேலையை பூர்த்தி செய்து கொடுப்பார். தமது தேவையை நிறைவேற்ற அலுவலகம் வரும் மக்கள் அலுவலகத்தில் இவர் இல்லாததால் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
போரில் ஆவணங்களை தவறவிட்ட மக்களிடம் மட்டுமல்ல ஆவணங்களை வைத்திருக்கும் மக்களிடமும் செயலர் சட்ட திட்ட நடைமுறை இப்படித்தான் என்று உல்டாவாய் செயற்படுகிறார் பாருங்கோ. காணிகளுக்கான ஆவணங்களை வைத்திருந்தும் சட்டதிட்டங்களுக்கு அமைய காணிகள் பதியப்படவில்லை என்று கூறி அந்தக் காணிகளை தான் கையகப்படுத்தி விற்கும் உரிமை எந்த சட்ட திட்டத்தில் இருக்கிறது. கையகப்படுத்தும் அரச அல்லது மக்களின் காணிகளில் முன்னாள் போராளிகளின் காணிகள் என்றால் முதலில் கைவைத்து விடுகிறார். காணிகளின் ஆவணங்களை வேறோர் பெயருக்கு மாற்றி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறார்.
1)கிளிநொச்சி கணேசபுரம் வீதியில் தினேஸ் மாஸ்ரர் அல்லது வெடி தினேஸ் என்றழைக்கப்படும் போராளி ஒரு காணியை வாங்கினார். 1983 ஆம் ஆண்டு காலப் பகுதியில் போராட்டத்தில் இணைந்து கொண்டவர் இப் போராளி. தனது சகோதரர் நண்பர்களின் உதவியுடன் 12 இலட்சம் ரூபாவுக்கு இக் காணியை வாங்கினார். இதனை விற்றவர் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தவர் ஒருவர் ஆவார். இந்தக் காணியில் 3 மாடிக் கட்டடத்தைக் கட்டினார் தினேஸ் மாஸ்ரர். அவர் இறுதி யுத்தத்தில் மாவீரரானார். மீள்குடியேற்றத்தின் போது தினேஸ் மாஸ்ரரின் மாமி இவ்வீட்டில் குடியேறினார். காணியை விற்றவர் தினேஸ் மாஸ்ரரின் மாமியை இருக்க விடாது எழுப்பிவிட்டு காணியை அபகரித்துள்ளார். காணியை அபகரித்தது மட்டுமல்ல ‘தினேஸ் மாஸ்ரருக்கு இந்தக் காணியை விற்கவேயில்லை வீடு கட்டியதும் எனது சொந்தப் பணத்தில் தான்’ என்கிறார்.
2)நிதர்சனம் பொறுப்பாளராக விளங்கிய சேரலாதன் கிளிநொச்சி திருநகரில் ஒரு காணி வாங்கினார். விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட சமாதான காலப் பகுதியில் இக் காணியை வாங்கினார். போர் முடிவடைந்த பின்னர் சேரலாதனின் தாயார் இந்தக் காணியில் சிறு வீடு அமைத்தார். காணியை விற்றவர் 4 பேருடன் வந்து வீட்டைப் பிடுங்கி எறிந்தார்.
3)கிளிநொச்சி சந்தையில் மீன் விற்பனை செய்யும் ஆவி என்றழைக்கப்படும் செல்வம் என்பவரிடம் 2002 ஆம் ஆண்டு மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு காணியை வாங்கினார் ஈழப்பிரியன் எனப்படும் மாணவர் அமைப்புப் போராளி. புனர்வாழ்வு பெற்று அவர் வரும் போது அவரது காணியில் செல்வத்தின் மகள் குடியிருப்பதைக் கண்டார். சசிகரன் என்ற தனது சொந்தப் பெயரில் இக் காணியை வாங்கியதற்கான ஆவணங்களை ஈழப்பிரியன் வைத்துள்ளார். இருந்தும் என்ன.
4)பிரதீஸ் மாஸ்ரர் என்பவர் திருநகரில் ஒரு காணியை வாங்கினார். தடுப்பிலிருந்து வந்த பின்னர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் வாழ்ந்து வருகிறார். காணியை விற்றவர் தனது காணியில் இவர் அடாத்தாக குடியிருப்பதாக வழக்குப் பதிவு செய்துள்ளார்.
5)சந்தோஷம் என்ற போராளி குடியிருப்பதற்காக அவரது தந்தை பரமநாதன் உடையார்கட்டில் ஒரு காணியை வாங்கினார். ஒரு தசாப்த காலத்துக்கு மேல் ஜரோப்பிய நாடொன்றில் உழைத்துச் சேமித்த பணத்தில் வாங்கிய இக் காணியில் அழகான வீடொன்றையும் கட்டினார். சந்தோஷம் புனர்வாழ்வு முடித்து திரும்பிய போது காணியை விற்றவர்களால் அபகரிக்கப்பட்டிருந்தது. காணியை தாம் விற்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
6)திருமுறிகண்டியில் ஏ9 வீதியில் சண்முகம் என்பவர் தான் விற்ற அரை ஏக்கர் காணியை மீண்டும் அபகரித்துள்ளார். காணியை வாங்கிய முன்னாள் போராளி ஒருவர் தடுப்பிலிருந்து வந்து காணிக்கு இன்னொருவரிடம் சென்றார். அவரிடம் சண்முகம் இவருக்கு காணி விற்றது உண்மை தான் அந்தப் பணத்தில் ட்றக்ரர் வாங்கினேன். இவர்களால் தான் நான் முள்ளிவாய்க்காலில் ட்றக்ரரை விட்டு விட்டு வந்தேன். எனவே எனது காணியை நான் விடமாட்டேன் என்றார்.
இப்படியாக முன்னாள் போராளிகள் பணம் கொடுத்து வாங்கிய காணிகளுக்கான ஆவணங்கள் இருந்தும் பறிகொடுத்து நிற்கின்றனர். போர் இடம்பெற்ற காலப் பகுதியில் போராளிகளுக்கு மக்கள் நன்கொடையாக காணிகளை வழங்கினர். ஆனால் இன்று பணம் கொடுத்து வாங்கிய காணிகளையும் முன்னால் போராளிகள் பறிகொடுத்து நிற்கின்றனர். அது மட்டுமா வெளிநாடுகளில் வாழும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களின் காணிகளையும் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கின்றனர். உதயநகரைச் சேர்ந்த வெளிநாட்டில் இருக்கும் உமா என்பவரின் காணியை ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார். மற்றும் மாதவன் மாஸ்ரர் சந்திரன் போன்றோரின் காணிகளையும் பிடித்து வைத்திருக்கின்றனர். இவர்களிடம் காணிகளுக்கான ஆவணங்கள் இருக்கின்றன.
சட்டம் தமிழ் மக்களின் காணிகளை பறிக்கிறது என்றால் காணியே இல்லாத சிங்கள மக்களை தமிழர் பகுதிகளில் குடியேற்றுவது எந்தவிதத்தில் நியாயமாகும். இதனை இந்த செயலர் உணர்வாரா.