அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நீதிமன்ற செயற்பாடுகளில்; தலையீடு செய்துள்ளார் என என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அவ் அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரச சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட விமல் வீரவன்ச எம்.பிக்கு 3 மாத காலத்துக்குள்ளேயே பிணை வழங்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பிணை வழங்க மறுப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும், புதுவருடத்துக்கு முன்னர் அவர் தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின என தெரிவித்துள்ள அவர் நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதமரின் தனிப்பட்ட தலையீட்டை தமது அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.