சென்னை ஆர்.கே.நகரில் எதிர் வரும் 12ஆம் திகதி நடத்த தீர்மானித்த இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவு தேர்தல் ஆணையத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக களமிறங்கினர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையிலேயே ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் கண்டெக்கப்பட்ட ஆவணங்களில் இடைத்தேர்தலுக்கு பணம் வழங்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.