13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து கட்டங் கட்டமாக தேசிய பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடியது என ஏற்றுக்கொள்ளக்கூடிய புதியதொரு தீர்வு வரைபு அல்லது திருத்த வரைபு முன்வைக்கப்படுமானால் அதற்கு எமது கட்சி பூரணமாக ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் டக்ளசுக்குமிடையேயான சந்திப்பு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற போதே இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். இதன்போது தமிழ் மக்களின் தற்போதைய முதன்மைக் கோரிக்கைகளான நிலமீட்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்கள், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள், மற்றும் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, முடக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டங்கட்டமாகவேனும் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்க முன்வருவதாக நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையில் அரசின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்பதையும் பிரதமரிம் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயங்கள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து கலந்துரையாட இருப்பதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது