நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள்ளடங்கும் தெருக்களைச் சுத்தமாக வைத்திருக்கும் திட்டம் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபையுடனிணைந்து செயற்படுத்தும் இத் திட்டத்தின் முதற்கட்டமாகக் கொக்குவில் கிழக்கு, கோவில் வீதியில் வசிக்கும் ஏறத்தாழ இருநூற்றைம்பது வதிவாளர்களிற்குக் கழிவு சேகரிக்கும் கொள்கலன்கள் (Garbage Bin) 08.04.2017 (சனிக்கிழமை) மு.ப.10.00 மணியளவில் கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய வளாகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.
வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரின் சிபார்சிற்கு அமைவாக வட மாகாண சபை நிதியிலிருந்து இருபத்தேழு இலட்சம் ரூபா இத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக நகர்த்தக் கூடிய கழிவு சேகரிக்கும் பெரிய கொள்கலன்களைப் பிரதேசத்தின் முக்கிய இடங்களில் வைப்பதற்கும், வீடுகளிற் சேகரிக்கும் கழிவுகளை வாரத்தில் இரு நாட்கள் சேகரிப்பதற்கும் அவ்வாறு கழிவு சேகரிக்கும் வாகனங்கள் வருவதனை மக்கள் முற்கூட்டியே அறியும் பொருட்டுக் குறித்த இசையொன்றினை ஒலிபரப்புவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இத் திட்டத்தினை ஆக்க பூர்வமாகவும், வினைத்திறனாகவும் நடாத்துவதன் மூலம் நல்லூர் பிரதேசம் யாழ் மாவட்டத்தில் ஓர் முன்னுதாரணமான சுத்தமானதாகவும் , அழகானதாகவும் அமைவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
கடந்த வருடம் வீதி அபிவிருத்தி அமைச்சினால் ரூபா. அறுபது இலட்சம் செலவில் கொக்குவில் கிழக்கு, கோவில் வீதி புனரமைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டமைக்காக அமைச்சர் டெனீஸ்வரனிற்கான கௌரவிப்பு நிகழ்வும் இந் நிகழ்வின்போது நடைபெற்றது.
இந் நிகழ்வில் வட மாகாண சபை அமைச்சர்கள் பொ. ஐங்கரநேசன், பா. டெனிஸ்வரன் ஆகியோரும், வட மாகாண சபை உறுப்பினர்கள் பா. கஜதீபன், ச. சுகிர்தன், இ. ஆர்னல்ட் ஆகியோரும், வீதிப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எந்திரி சிவராஜலிங்கம், பிரதான பொறியியலாளர் எஸ் ஜெகநாதன் ஆகியோரும், நல்லூர் பிரதேச சபை செயலாளர் எஸ். சுதர்ஜன், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ. ஜெயக்குமரன், கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலய அதிபர் திலீபன், ஆசிரியர்கள் மற்றும் பிரதேச வாழ் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.