திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போது அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில் உள்ளூர் மக்கள் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராகவும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். போராட்டத்தில் பெண்ணை தாக்கிய டி.எஸ்.பி. மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.