நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இன்று காலை 20 இளைஞர்கள் திடீரென நாடியம்மன் கோவில் திடலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியதனை எதிர்த்து நெடுவாசலில் 22 நாட்களாக் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தமிழக அரசின் உத்திரவாதத்தை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
எனினும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் மீண்டும் போராட்டத்தை தொடங்குவது குறித்து நெடுவாசல் பேராட்டக்குழுவினர் இரண்டு கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தியிருந்தனர்.
அதில் எதிர்வரும் 15ம்திகதி போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்ட நிலையில் நெடுவாசலில் அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் 20 பேர் இன்று காலை திடீரென நாடியம்மன் கோவில் திடலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அதனை ஏற்க மறுத்த இளைஞர்களிடம் கிராமத்தினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.