பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாக இருப்பின் அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே சாத்தியமாகும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தின் இருப்பை பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது எனவும் இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்புக் கூறலை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதொன்றல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின், அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக மட்டுமே கிடைக்கும் எனவும் இவ்விடயத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்று அதன் ஊடாக சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்புவதன் மூலமே தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.