யுத்தத்தின் போது தனது தந்தையை இழந்த மாணவி ஒருவரின் இளம் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகாக அறிக்கை ஒன்று மாகாண கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படும் என கிளிநொச்சி வலய பதில் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சியின் மேற்கு பிரதேசத்தில் நகரிலிருந்து பத்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள 1ஏபி பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 01-04-2017 அன்று மது போதையில் நள்ளிரவு 11.27 மணிக்கு குறித்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தவறாக நடக்க முற்பட்ட போது குறித்த பெண் மற்றும்அவரது மகள் ஆகியோர் வீட்டின் பின்புற வாயில் ஊடாக தப்பி வெளியேறி அருகில் உள்ள வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
வறிய நிலையில் உள்ள குறித்த பெண், வீட்டுத்திட்டம் மூலம் அமைக்கப்பட்ட வீட்டில் கதவுகள் பொருத்தப்பட்டிருந்த போதும் ஜன்னல்கள் முழுமையாக பொருத்தப்பட்டிருக்க வில்லை. ஜன்னல் கிறில்கள் வெறுமனே கயிற்றினால் கட்டப்பட்டே காணப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆசிரியர் ஜன்னல் கிறிலை கழற்றிவிட்டு அதன் வழியே வீட்டுக்குள் சென்றுள்ளார்.என குறித்த பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்
இதேவேளை அன்றைய தினமே அதே பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணின் வீட்டுக்குள்ளும் உள்நுழையும் நோக்கில் உந்துருளியில் சென்று, வீட்டு வாசலுக்கு முன்பாக நின்று நீண்ட நேரமாக ஒலி எழுப்பியவாறு நின்றதாகவும் இந்தப் பெண் எழுத்து மூலம் பாடசாலை அதிபருக்கு அறிவித்துள்ளார்.
இந்த வகையில் மேற்படி இரண்டு பெண்களும் 05-04-2017 அன்று எழுத்து மூலம் பாடசாலை அதிபருக்கு முறைபாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் பாடசாலை அதிபர் மதுரநாயகம் அவர்கிளிடம் தொடர்பு கொண்டு வினவிய போது
தனக்கு அவ்வாறு ஒரு எழுத்து மூலமான முறைபாடு கிடைத்திருக்கிறது எனவும் தான் உரிய நடவடிக்கைக்காக வலயக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது தனது கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது பாடசாலை விடுமுறை காலம் என்பதனால் வரும் வாரத்திற்கு பின்னர் விசாரணை குழு ஒன்றை அமைத்தது விசாரணை செய்து அதன் அறிக்கையை உரிய நடவடிக்கைகாக மாகாணத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை குறித்த ஆசிரியர் அரசியல் செல்வாக்கு உடையவர் என்றும், அதன் மூலம் குறித்த பெண்களுடன் சமரச முயற்சியில் ஈடுப்பட்ட போதும் அதுவும் சாத்தியப்படவில்லை எனவும் தெரியவருகிறது.