முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து சொந்த நிலத்தில் தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி 43 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் 43வது நாளான இன்றையதினம் இதுவரை தமது சொந்த நிலங்களை கோரி தாம் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு அரசாங்கத்தால் உத்தோயோகபூர்வமாக எந்த பதிலும் நேரடியாக தமக்கு வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க அதிபரோ பிரதேச செயலரோ இதுவரையில் தம்மை திரும்பிக்கூட பார்க்கவில்லை எனவும் அரசின் அறிவிப்பாக எதையும் தமக்கு அரச அதிபர் வழங்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு சென்ற அவர்கள் தமது போராட்டத்துக்கு இதுவரையில் என்ன பதில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது என வினவியதுடன் விரைவில் நல்ல முடிவை தருமாறு கோரி மகஜர் ஒன்றினையும் அரசாங்க அதிபர் பிரணவநாதனிடம் கையளித்துள்ளனர்.