பாலியல் வீடியோக்களை முடக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் வட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம்; பதிவு செய்யப்பட்ட 2 பாலியல் பலாத்கார வீடியோக்களுடன் கடிதம் ஒன்றையும் உச்சநீதிமன்றுக்கு அனுப்பியிருந்தது.
அதில், அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாகவும், இத்தகைய வீடியோக்கள் வெளியாவதை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தது. இதனை ஒரு வழக்காக எடுத்துக்கொண்ட நீதிமன்றம் குற்றவாளிகளை கண்டறிய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளதுடன் பாலியல் குற்ற வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை தடுப்பதற்கு தொழில்நுட்பரீதியாக தீர்வு காண்பதற்காக, மத்திய அரசு மற்றும் இணைய நிறுவன பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்திருந்தது.
இந்நிலையில், நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரர்சார்பில் முன்னிலையான சட்டதரணி வட்ஸ்அப் நிறுவனத்தையும் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வாட்ஸ்அப்பை பிரதிவாதியாக சேர்த்துக் கொண்டு வட்ஸ்அப் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.