கிளிநொச்சியில் கடந்த சில ஆண்டுகளை விட இவ்வருடம் சித்திரை புதுவருடம் சோபை இழந்து காணப்படுவதாக வர்த்தகர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் புதுவருட காலங்களில் சுமார் ஒரு வாரமாக வியாபாரம் களை கட்டியிருக்கும் எனவும் பொது மக்களும் கூட்டமாக வருகை தந்த புதிய ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக அக்கறை காட்டுவார்கள் எனவும் ஆனால் இவ்வருடம் அவ்வாறில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
புது வருடத்தின் முதல் நாள் இரவு வரை பட்டாசு சத்தங்கள் கூட கேட்கவில்லை எனவும் ஆங்காங்கே ஒன்று இரண்டு சத்தங்கள் மாத்திரமே கேட்கப்படுவதாகவும் முன்னைய ஆண்டுகளில் என்றால் முதல் நாள் இரவிலிருந்தே பட்டாசு சத்தங்கள் வரவேற்க தொடங்கிவிடும் என் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 54 நாளாகவும் காணியும் வீடும் கேட்டு பன்னங்கண்டி மக்களின் போராட்டமும் 24 நாளாக தொடர்கிறது.
மக்கள் பெரும் கடன் சுமைக்குள்ளும், வாழ்வாதார நெருக்கடிக்குள்ளும் வாழ்கின்ற இந்த நிலையிலேயே புதுவருடம் கிளிநொச்சியில் சோபை இழந்து காணப்படுகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது