சகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈட்டப்பட்ட வெற்றியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு நல்லிணக்கம் சகோதரத்துவம் ஆகியனவற்றுடன் மேலும் வலுவாக அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்போம் என அவர் கோரியுள்ளார்.
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆத்மார்த்தமான நீண்ட நெடிய உறவுகளையே இந்த புத்தாண்டு பறைசாற்றி நிற்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மனிதனின் நன்றி பாராட்டுதலை எடுத்தியம்பும் விதமாக புத்தாண்டு மரபுகள் காணப்படுகின்றன என தெரிவித்துள்ள ஜனாதிபதி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வரும் அனைத்து இலங்கையர்களுக்கும் சொளபாக்கியமும், சமாதானமும் நிறைந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
1 comment
‘ஈட்டப்பட்ட வெற்றியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு நல்லிணக்கம் சகோதரத்துவம் ஆகியனவற்றுடன் மேலும் வலுவாக அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்போம்’, என்ற ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தியானது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்துள்ளது? இந்நன்னாளில் கூட, ‘ஈட்டப்பட்ட வெற்றி’, குறித்தே பிரஸ்தாபிக்கின்றாரேயன்றி இன்னோரன்ன பல வித நியாயமான சாத்வீகப் போராட்டங்களிலும் ஈடுபட்டிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை?
பதவிக்கு வந்து இற்றைக்கு இரண்டரை வருடங்கள் ஆகின்ற நிலையிலும், தேர்தல்கால வாக்குறுதிகளில் தமிழர் தரப்புக்குக் கூறப்பட்ட எதையுமே இன்று வரை பூரணமாகச் செய்து முடிக்கவில்லை! ஏற்கனவே வாழ்வாதாரழந்து வாழும் மக்கள், சொந்தக் காணி நிலங்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்குமாகப் போராடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகளுக்கு ஆளாகி வீதிகளில் அலையும்போது, நுனிநாக்கு நல்லிணக்கம் பற்றி ஜனாதிபதி கதையளக்கின்றார்?
தமிழர் தம் தலைவிதியை எண்ணும்போது, நல்லாட்சி, நல்லிணக்கம் என்று பேசி மக்களை ஏமாற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை விட, வெளிப்படையாகவே இனவாத அரசியல் செய்த திரு. மகிந்த ராஜபக்ஷ எவ்வளவோ மேல், என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது?
இதே மன உணர்வுகளிலேயே பெரும்பான்மைச் சிங்கள மக்களும் இருக்கின்றார்கள் போல் தெரிகின்றது? ஆக, முதுகெலும்பற்ற இவர்கள் கைகளில் இருந்து ஆட்சி பறித்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை? தமிழர் தலைவிதி, ‘கண்ணீரில்தான் வாழ்வு’, என்று ஆகிவிட்டதொரு நிலையில், நாட்டை யார் ஆண்டால் நமக்கென்ன?