தெருவோரத்தில் தவித்துக் கிடக்கும் எமக்கு என்ன புத்தாண்டு என காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்காக கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபடும் தாயொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 55ஆவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் சார்பாகவே அந்த தாயார் இவ்வாறு கூறினார்.
நாங்கள் தெருவோரத்தில் கண்ணீரோடு இருக்கிறோம். காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளை வரும் வரும் என்று வீதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் பிள்ளைகளைப் பற்றி யாரும் நல்ல செய்தியுடன் வருவார்கள் என்று 55 நாட்களாக இந்த தெருவில் காத்திருக்கிறோம். ஆனால் எவரும் எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என அந்த தாயார் குறிப்பிடுகிறார்.
நாங்கள் வீதியில் தவிக்கும்போது எமக்கு என்ன புத்தாண்டு? நல்லநாள் பெருநாட்களை கொண்டாடிய காலங்கள் எல்லாம் மறைந்தோடி விட்டன. எங்கள் பிள்ளைகள் வரும் நாட்கள்தான் எங்களுக்குப் பெருநாட்கள். அவர்கள் வந்ததன் பின்னரே நாங்கள் பெருநாட்களைக் கொண்டாடுவோம். நாங்கள் இப்பிடியொரு நிலையில் இருக்க அரசு எங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது என்றும் அந்த தாயார் தனது வருத்தத்தை தெரிவித்தார்.
இதேவேளை கிளிநொச்சியில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் புத்தாண்டு சோபை இழந்து காணப்படுவதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர். தமது வியார நடவடிக்கையில் ஏற்பட்ட பின்னடைவை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு தெரிவிக்கின்றனர். மக்களின் மனங்களில் ஏற்பட்ட சோர்வு, மகிழச்சியின்மை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
நாங்கள் வீதியில் இருக்கிறோம்! உனக்கென்ன புத்தாண்டு? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர் கேப்பாபுலவு மக்கள். தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி கடந்த மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
128 குடும்பங்களிற்கு சொந்தமான 482 ஏக்கருக்கு அதிகமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமம்இ சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள், வீடுகள், பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.