போர் முடிந்துவிட்டது, விடுதலைப் புலிகளும் தற்போது இல்லை. இந்த நிலையில் எங்கள் மக்களுடைய காணிகளை எவருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என்று எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
காணிப் பிரச்சினை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, படைத்தளபதிகள், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முப்பது ஆண்டுகளாக தமிழ் மக்கள் தங்கள் காணிகளுக்காக போராடி வருகிறார்கள் என்றும் இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்த பின்னரும் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
மக்களின் காணிகளை உரியவர்களிடம் கையளிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் இராணுவத் தளபதியிடமும் வலியுறுத்தியதாகவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இதேவேளை இக் கருத்துக்களுக்கு பதில் அளித்த இராணுவத் தளபதி மக்களின் காணிகளை இராணுவத்தினர் வைத்திருக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்றும் சிவில் அதிகாரத்தின் பிரகாரமே காணிகள் இராணுவத்தின் வசம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை வடக்கில் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் கேப்பாபுலவில் ஒரு தொகுதி காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.