வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனைகளை நடத்தும் என அந்த நாட்டின் சிரேஷ்ட்ட அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய வடகொரியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹன் சொங் ரியோல், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் இராணுவ முன்னெடுப்பு எல்லை மீறும் பட்சத்தில், யுத்தம் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கும் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த தினம் அமெரிக்காவின் உப ஜனாதிபதி மைக் பென்ஸ், வடகொரியா இனி ஏவுகணை சோதனைகளை நடத்தக் கூடாது எனவும் வடகொரியாவின் விடயத்தில் அமெரிக்கா பொறுமை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு திட்டமிடும் பட்சத்தில், வடகொரியா அணுவாதங்களின் ஊடாக பதிலளிக்கும் என்று வடகொரியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார்.