கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் காணி உரிமை கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வியாழக்கிழமை முப்பதாவது நாளை எட்டியுள்ளது. குறித்த மக்கள் 1990களிலிருந்து குறுpத்த பிரதேசங்களில் குடியிருந்து வருகின்ற போதும் அவர்கள் குடியிருக்கும் காணி தனியாருக்குச் சொந்தமானதாக இருப்பதனால் காணி உரிமம் இன்றியே வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட உதவி திட்டங்களை பெறமுடியாது மிகவும் நெருக்கடியான நிலைமைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே வறுமைக்கோட்டிற்குள் வாழ்ந்த மக்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட எவ்வித உதவிகளும் கிடைக்காமையினால் அவர்களின் பொருளாதார நிலைமைகள் மேலும் பின்தள்ளப்பட்ட நிலையிலேயே மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தங்களுக்கு காணி உரிமம் வழங்கப்பட்டு அதன் பின்னர் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு கோரிக்கையை முன்வைத்தே கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முப்பது நாளாக தொடர்கின்ற தங்களது போராட்டத்திற்கு ஊடகங்கள் மாத்திரமே பக்கபலமாக இருப்பதாகவும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வருகை தந்து பார்வையிட்டு சென்றுள்ளனர் எனவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்