வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள் எங்கள் போராட்டத்தை ஆரம்பித்து இன்று வியாழக்கிழமை அறுபதாவது நாளாகிறது. இந்த அறுபது நாளிலும் நாங்கள் அநாதைகள் போலவே வீதியில் போராடி வருகின்றோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று அறுபதாவது நாளை எட்டியுள்ளது. எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சனி இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த பெப் ரவரி 20ம்திகதியன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. தங்களை அனைவரும் கைவிட்டுள்ளதாகவும் 60 ஆவது நாளாக தாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள் மத்தியில் காணாமல் ஆக்ப்பட்ட தங்களின் உறவுகளுக்காக அவர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எதிர்பார்த்து கவனயீர்ப்பை ஆரம்பித்த போதும் இந்த போராட்டததை எவரும் கண்டுகொள்ள வில்லை என்றும் கவலை தெரிவித்தார்.
தாங்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி அன்று கிளிநொச்சியில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புக்கள், போக்குவரத்துச் சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், அரசியல் தரப்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து தங்களது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒத்துழைப்பு வழங்கி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் நல்ல தீர்வை பெற்றுக்கொள்ள வலுச் சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.