Home இலங்கை காக்கை வன்னியன் போன்றவர்களால் தமிழர் சமுதாயம் அழிகின்றது. – சி.வி.

காக்கை வன்னியன் போன்றவர்களால் தமிழர் சமுதாயம் அழிகின்றது. – சி.வி.

by admin


காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அமைக்கப் பெற்ற மாவீரன் குலசேகரம் வயிரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறப்பு விழா இன்று  வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வன்னி இராச்சியத்தின் மாவீரனாக விளங்கிய பண்டாரவன்னியன் அவர்களின் திருவுருவச் சிலையை முல்லைத்தீவில் நிறுவ வேண்டும் என்ற தீராத அவாவில் பல முயற்சிகளை மேற்கொண்ட வடமாகாண சபையின் உறுப்பினர் கௌரவ திரு.துரைராஜா ரவிகரன் அவர்களின் நீண்டநாள் கனவும் இன்று நனவாகியுள்ளது.

தமிழர்களின் வீரம் செறிந்த வாழ்வியல் முறைமைகளை உலகுக்கு பறைசாற்றி நிற்கும் வன்னி மண்ணின் இறுதித் தமிழ் மன்னனாக விளங்கிய மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாறு பற்றி எமது இளம் சிறார்களும் ஏனையோர்களும் அறிந்திருத்தல் அவசியமாகும்.

பண்டார வன்னியன் 1777ம் ஆண்டில் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. 1771ல் பிறந்ததாகவும் கூறப்படுகிறது. 1803ம் ஆண்டு உயிர் நீத்ததாகவும் கூறப்படுகின்றது. அப்படியானால் அவர் 26 வருடங்களே வாழ்ந்தார் என்று கொள்ள வேண்டும் அல்லது 32 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று கொள்ளப்பட வேண்டும். அரசாங்கத்தால் பண்டார வன்னியன் தினமாகப் பிரகடனப்படுத்தியிருக்கும் தினம் ஆகஸ்ட் மாதம் 25ந் திகதி. வன்னியின் கடைசி மன்னனான பண்டாரவன்னியன் திருமணஞ் செய்தது தற்போது அனுராதபுர மாவட்டத்தினுள் அடங்கும் நுவரவாவியின் குமாரசிங்க மகா வன்னியனின் மகளை.

அக்காலத்தில் நுவரவாவிப் பிரதேசம் தமிழர் வாழ் இடமாக இருந்தது. என் பிள்ளைப் பிராயத்தில் பழைய அனுராதபுர நகரத்தில் தமிழ் மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வந்தார்கள். 18 வருடங்கள் அனுராதபுரம் நகரசபையின் தலைவராக இருந்து வந்தவர் திரு.நடராஜா என்ற ஒரு தமிழரே.

முல்லைத்தீவைச் சேர்ந்த பண்டாரவன்னியன் தெற்கில் மணம் முடித்ததால் வன்னியின் வடக்கிலும் தெற்கிலும் அவன் ஆதிக்கம் பரவியிருந்தது.

1621ல் போர்த்துக்கீசர்கள் இலங்கையின் கரையோரங்களைக் கைப்பற்றிய பின்னர் வன்னி இராச்சியத்தை கைப்பற்றுவதற்கு முயன்ற போதும் அவர்களின் ஆட்சி முடிவுக்கு வரும்வரை வன்னி இராச்சியத்தை அவர்கள் கைப்பற்ற முடியவில்லை.

வன்னியர் என்ற சொல் ‘வன்மை’ என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதாக கருதப்படுகின்றது. வன்மை என்ற சொல்லுக்கு ‘வலிமை நிறைந்த’ என்பது பொருளாகும். வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பில் இருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னி என்ற சொல் நெருப்பையும் குறிக்கும்.

எனினும் 1882ம் ஆண்டில் ஒல்லாந்தர்கள் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் முதன் முதலாக வன்னி இராச்சியம் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இப்போர் பற்றி திரு.லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

‘ஒல்லாந்தர்கள் உலகில் எத்தனையோ நாடுகளுடன் போர் தொடுத்திருக்கின்றார்கள். எனினும் இலங்கையில் தமிழ் மன்னர்களுடன்; மேற்கொண்ட போர் அவர்களுக்கு தமிழனின் வீரம் செறிந்த போர்த் தந்திரத்தையும் மன உறுதியையும் வியந்து போற்ற வைத்தது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் இலங்கையின் அனைத்துப் பாகங்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த போதும் வன்னி அரசை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு பல தந்திரங்களை கையாள வேண்டியிருந்தது.

சோழப் பேரரசின் வழிவந்த பண்டார வன்னியன் வெள்ளையர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை தகர்த்தெறிந்து வன்னி இராச்சியத்தை கைப்பற்றியதுடன் மட்டும் நின்றுவிடாது ஆங்கிலப் படைகள் கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முயற்சித்த போது கண்டிய மன்னனுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் போர் தொடுத்து ஆங்கிலேயர்களை புறமுதுகிட்டோடச் செய்தான்.

திரும்பவும் ஆங்கிலேயர்கள் வன்னிப் பெருநிலப்பரப்பில் போர் தொடுப்பதற்கு முன்பதாக வன்னி இராச்சியத்தின் மன்னனாக விளங்கிய மாவீரன் பண்டாரவன்னியனுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அவனுடன் நெருங்கிப்பழகி வன்னி இராச்சியத்தை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் பண்டாரவன்னியனால் ஏற்றுக் கொள்ளப்படாத போதும் அவனின் அருமைத்தம்பியர்களான கைலாயவன்னியனதும், பெரியமெயினாரினதும் வற்புறுத்தலின் பெயரில் ஆங்கிலேயர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்காக யாழ்ப்பாணக் கோட்டைக்கு சென்றிருந்தான்.

அங்கே பண்டாரவன்னியனுக்கு பிரமாதமான வரவேற்புக்கள் வழங்கப்பட்டதுடன் எப்படியாவது பண்டாரவன்னியனை தமது ஆட்சிக்குள் அடக்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆங்கிலேய தளபதிகள் முயன்றனர். இவ்வாறான பொறிமுறைகள் இப்போது எம் அரசாங்கங்களாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ‘வா’ என்று அழைப்பார்கள். போனல் குடிக்கத் தருவார்கள், சாப்பிடத் தருவார்கள். ஆனால் உரித்துக்களைத் தரமாட்டார்கள்!

எனினும் அஞ்சா நெஞ்சன் மாவீரன் பண்டாரவன்னியன் அவர்களின் கோரிக்கைகளை தூக்கி எறிந்து போருக்கு தயாரானான். பண்டாரவன்னியனுடன் நேருக்கு நேர் போர் புரிந்து அவனை வெல்ல முடியாது என்பதை நன்கு அறிந்த ஆங்கிலேயப் படைகள் வன்னி இராச்சியத்தின் சிற்றரசனாக விளங்கிய காக்கை வன்னியனின் உதவியுடன் பண்டாரவன்னியன் போர்ப் பாசறையில் தனித்திருந்த போது அவனை தந்திரமாக ஒட்டிசுட்டான் வரை கூட்டிச்சென்று வெள்ளையர்களின் இராணுவத் தளபதி திரு.வொன் டிறிபேர்க் அவர்கள் மூலம் கைது செய்து விசாரணை என்ற போர்வையில் சுட்டுக் கொன்றார்கள் என்று கூறப்படுகின்றது.

வன்னியைச் சேர்ந்த எமது சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி சத்தியலிங்கம் அவர்கள் காக்கை வன்னியன் ஒரு கற்பனைப் பாத்திரமே என்று எங்கோ கூறியிருந்தார். ஆனால் காக்கை வன்னியன் போன்ற கதாபாத்திரங்கள் இன்றும் எம்மிடையே வாழ்கின்றார்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்வார் என்று நம்புகின்றேன்.

பண்டாரவன்னியன் தனது இறுதி மூச்சு இருக்கும் வரை ஆங்கிலேயப் படைகளுக்கு அஞ்சாது பெரு வீரனாக வன்னி இராச்சியத்தை ஆண்ட இறுதித் தமிழ் மன்னன் என்ற பெயருடன் உயிர் நீத்தான்.

பண்டாரவன்னியனின் வரலாறு எம் அனைவருக்கும் புத்துணர்வையும் நம்பிக்கையையுந் தரவல்லது. நேர் சிந்தனையுடன் நிமிர்ந்து நடந்து வாழ்க்கையை எதிர் கொண்ட மாவீரன் அவன். அவனின் வாழ்க்கை உத்தியோகபூர்வமாக எழுதப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது.

சரித்திர ஆசிரியர்களையும் வன்னி பற்றிய அறிவு படைத்த அறிவாளிகளையும் கொண்ட ஒரு குழுவை அமைத்து சகல செய்தித்தரவுகளையும் அறிந்த பின் ஒரு நூலினை வெளியிடலாம் என்று நினைக்கின்றேன். பத்திரிகையில் வேண்டுமெனில் அறிக்கை விடுத்து தகவல்கள் அறிந்தவர்கள் அவற்றை அந்த குழுவின் கவனத்திற்குக் கொண்டுவருமாறு கோரலாம். இவற்றிற்கான செலவை எமது பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எமக்குத் தந்துதவுவார் என்று நம்புகின்றேன்.

தோல்விகள் நிரந்தரமானது அல்ல. அதே போன்று வெற்றி வாகை சூடியவர்களும் தொடர்ந்து வெற்றியாளர்களாக மிளிர முடியாது என்பதற்கு பண்டாரவன்னியனின் வரலாறு ஒரு சிறந்த சான்றாகும்.

வன்னி இறுதி யுத்தத்தின் போது மறைந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளை ஒன்று திரட்டி இன்று பண்டாரவன்னியனின் உருவத்தில் இங்கு சிலையாக வடித்திருக்கின்றோம்.

தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறுகளையும் அவர்களின் யார்க்கும் அஞ்சா மனோதிடத்தையும் இந்த சிலை என்றென்றும் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.  அதை வடித்த தம்பி பாலமுருகனுக்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகுக!

இன்று எமது மக்கள் சொல்லொண்ணாத்துயரங்களில் வாடுகின்றார்கள். உறவுகளை இழந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள், இருப்பிடங்களை இழந்தவர்கள், நிலபுலங்களை இழந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் துன்பச் சுமைகளுடன் வாழுகின்றார்கள். இவர்களின் துன்பங்களை எவ்வாறு துடைக்க முடியும் அல்லது இவர்களுக்கு எந்த வகையில் எம்மால் உதவிகளை அல்லது ஒத்தாசைகளை வழங்க முடியும் என நாம் யாவரும் அல்லும் பகலும் செய்வதறியாது சிந்தித்த வண்ணம் உள்ளோம்.

இந்தத் தருணத்தில் எமது வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் முன்வர வேண்டும்.   காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இன்றைய இந்தப் புனித தினத்தில், பண்டார வன்னியனின் சிலை அவனின் வீரப் பிரதாபங்களை மக்கள் மனதில் சுடர் விட்டு எரிய விட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ்ப் பேசும் மக்கள் யாவரும் ஒன்றிணைந்து எமது உரிமைகளுக்காகக் போராடுவோம் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More