கிளிநொச்சி அக்கராயனில் குடிநீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று வியாழக்கிழமை (20) ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது. அக்கராயன் மகா வித்தியாலயம் முன்பாக உள்ள நீர்த்தாங்கி முன்பு இருந்து ஆரம்பித்த இவ் ஆர்ப்பாட்டம் அக்கராயன் கிராம அலுவலர் அலுவலகம் வரை சென்றது. அக்கராயனில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக அக்கராயன் சுபாஸ் குடியிருப்பு, அக்கராயன் மகா வித்தியாலயத்திற்கு பின்பகுதியில் உள்ள அறுபது வரையான குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் நீர் வழங்கல் வடிகாலமைப்பினால் அக்கராயனில் நடைமுறைப்படுத்தப்படும் குடிநீர்த் திட்டத்தினை தமது பகுதிகளுக்கும் விநியோகம் மேற்கொள்ளுமாறு கோரியே இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுபாஸ் குடியிருப்பு அக்கராயன் வைகறை முன்பள்ளி அருகிலான சுமார் நான்கு திறந்த பொதுக் கிணறுகள் மற்றும் இப்பகுதியில் காணப்படுகின்ற பத்து வரையான பயன்படுத்த முடியாதுள்ள குழாய்க் கிணறுகள் என்பவற்றை பயன்பாட்டிற்குரிய வகையில் மாற்றுமாறும் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமது நெருக்கடியினை கிராம அலுவலர் மூலமாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்துமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கிராம அலுவலரிடம் வலியுறுத்தினர்.
இதேவேளை அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக அக்கராயன் மத்தியில் காணப்படுகின்ற குடிநீர் நெருக்கடியினைத் தீர்ப்பதற்கு மக்களின் ஒத்துழைப்புடன் வேலைத் திட்டங்களை மேற்கொள்வது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கிராம அலுவலர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். கிளிநொச்சி மாவட்டத்திலே குடிநீர் நெருக்கடியினை எதிர்கொள்கின்ற முக்கிய கிராமங்களில் ஒன்றாக அக்கராயன் விளங்குகின்றது. அக்கராயன் மத்தி கெங்காதரன் குடியிருப்பு அக்கராயன் மேற்குப் பகுதிகளில் குடிநீர் நெருக்கடி அதிகமாகக் காணப்படும். இதேவேளை அக்கராயன் கிராம அலுவலர் பிரிவில் 433 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளை மேற்கொள்ளும் வேலையை விரைவு படுத்துமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்